உலகில் உள்ள எல்லோரும் வாழ்க்கையில் எப்பாடு பட்டாயினும் வெற்றிக் கனியை ருசித்து விட வேண்டும் என்றே விரும்புகின்றனர்.ஆனால் ஒரு சிலர் தான் வெற்றிக் கனியைத் தட்டிப்பறிக்கிறார்கள், சாதனையாளர்களாகிறார்கள். பலர் வெற்றி பெற முடியாமல் தோல்வியை தழுவுகின்றனர், தோல்வியில் துவண்டு நொந்து நூலாகி விரக்தியடைகின்றனர். எந்தவொரு வெற்றியும் எளிதில் கிடைத்து விடுவதில்லை.
“ வெற்றி வேண்டுமா… போட்டுப் பாரடா எதிர் நீச்சல்…”
எல்லோருக்குமே கனவுகள் இருக்கின்றன. எல்லோருமே அவற்றை நனவாக்கி வெற்றி பெற விடாமுயற்சி,உழைப்பு, மன உறுதியுடன் செயற்பட்டால் வெற்றி தேவதையே வெற்றி மாலையை சூட்டுவாள். அடக்குமுறை, தோல்வி, நிராகரிப்பு இவற்றால் மனம் உடைந்து “விதி செய்த சதி” என முடங்கி கிடந்தால் வெற்றி ஒரு போதும் கிடைக்காது.
விடாமுயற்சிக்கு சிறந்த உதாரணமாக சிலந்தி , எறும்பை எடுத்து கொள்ளலாம். வீட்டுக்குள் வலை விரிக்கும் சிலந்தியினது கூட்டை நீங்கள் எத்தனை முறை பிரித்து போட்டாலும் விடாமுயற்சியுடன் வாயாலே திரும்ப திரும்ப புது வீடுகளை கட்டி குடி புகும். அதேபோல் வரிசையாக செல்கின்ற எறும்பு கூட்டத்தின் குறுக்கே எத்தனை இடத்தில் தடுப்பு வைத்தாலும் அது நிற்காது. தடுப்பை சுற்று சுற்றி வந்து புதிய பாதையை அமைத்து சென்று விடும். இந்த அற்ப இனங்கள் கொண்டுள்ள விடாமுயற்சி கூட ஆறறிவு படைத்த மனித இனத்துக்கு இல்லையா? நிச்சயம் இருக்கிறது. உலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்குள்ளும் இந்த குணம் புதையலாக மறைந்து கிடக்கிறது.
நாம் எமக்கு ஏற்படக்கூடிய சிறுசிறு பிரச்சனைகளையும், சிரமங்களையும், இடையூறுகளையும் ஒரு புறம் தள்ளிவிட்டு சலிப்படையாத உள்ளம், தளராத மனத்துடன் தீராத பிரச்சனை எதுவுமே கிடையாது என்று ஒரே ஒரு எண்ணத்துடன் நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைப்பது நிச்சயம். எல்லாமே நமது மனப்பான்மையைப் பொறுத்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் .
கடவுள் பிரச்சனை என்ற பூட்டை மட்டும் நம்மிடம் தருவதில்லை. தீர்வு என்ற சாவியையும் சேர்த்தே நம்மிடம் தருகிறார். அந்த ஒவ்வொரு பூட்டுக்கு ஏற்ப சாவி எது என்பதை கண்டறிய விடாமுயற்சி அவசியம்.
தோல்வியடைந்தற்காக இலக்கைக் கை விட வேண்டிய அவசியமில்லை. உலகின் அதிகபட்ச பதவியை எட்டிப் பிடித்த அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் வாழ்க்கை தோல்வியின் படிக்கட்டுகளில் எழுதப்பட்டிருந்தது. இளம் வயதில் தாயாரின் மரணம், தேர்தலில் தோல்வி, பணி இழப்பு, திருமணத்துக்கு நிச்சயம் செய்த பெண்ணின் மரணம், நோயால் மருத்துவமனை வாசம், சபாநாயகர் தேர்தலில் தோல்வி, பாராளுமன்ற தேர்தலில் தோல்வி, செனட் தேர்தலில் தோல்வி, துணை ஜனாதிபதி தேர்தலில் தோல்வி, தொடர்ந்து 30 ஆண்டுகளாக தோல்விகளை மட்டுமே எதிர்கொண்ட ஆபிரகாம் லிங்கன் சோர்ந்து துவண்டு விடாமல் பீனிக்ஸ் பறவையாய் உற்சாகத்துடன் எழுந்து விடாமுயற்சியுடன் செயற்பட்டார். அதனாலேயே ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
தோல்வி என்பது தற்காலிகமானது ஆனால் இலக்கைக் கைவிட்டு விடுவது என்பது நிரந்தரமானது. தோல்வியடையாமல் வெற்றி பெற்றவர்கள் இல்லை. கீழே விழுந்துதான் நாம் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்கிறோம். பலமுறை கீழே விழுந்துதான் ஒரு குழந்தை நடக்கப் பழகுகிறது. கீழே விழுந்ததற்காக ஒரு குழந்தை நடக்க முயற்சிக்காமல் இருந்தால் அது வாழ்க்கை முழுவதும் தவழ்ந்து கொண்டு தான் இருக்க வேண்டும். நான்கு இடங்களில் கிணறு தோண்டுவதை விட, ஒரு இடத்தில் தொடர்ந்து ஆழமாகத் தோண்டினால் தண்ணீர் கிடைக்கும். எனவே நம் முயற்சியை ஒருமுகப்படுத்தித் தொடர்ந்து முயன்றோமானால் வெற்றி நிச்சயம். தோல்வி வெற்றிக்கான அடிப்படை. வெற்றியை விட நாம் தோல்வியிலிருந்தே அதிகம் கற்றுக் கொள்ள முடிகிறது. நமது பயணத்தில் கீழே விழும்போதெல்லாம் உடனே எழுந்து விடுவோம் என்பதுதான் விடாமுயற்சி. எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைத் தாண்டி இலக்கை அடைய முயற்சி செய்வதே வெற்றியின் ரகசியம் ஆகும்.
வெற்றிக்கான தாரக மந்திரம் விடாமுயற்சி, உழைப்பு, குறிக்கோள், தன்னம்பிக்கை, செம்மையான திட்டம் என்பனவாகும். எதனை, எப்போது, எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நன்கு திட்டமிட்டுச் செயல்படும்போது, இடையே ஏற்படக் கூடிய இடையூறுகளை எப்படிக் களைவது என்று ஆராய்ந்து வழிமுறைகளை மாற்றிக்கொண்டால் வெற்றிதான்.
ஒட்டு மொத்த இந்திய தேசமும் கொண்டாடும் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாம் பிறந்தது சிறிய ஊர், எளிமையான குடும்பம், கிராமத்தில் படிப்பு, வசதி வாய்ப்பு இல்லை. ஆனால் அவரது கடின உழைப்பும், தளராத மனமும் அவரைச் சிகரத்தை எட்ட வைத்தது. ராமநாதபுரத்தில் கடலோர கிராமத்தில் பிறந்து, நாளிதழ்களை வீடு வீடாக போடுவதால் கிடைத்த பணத்தைக் கொண்டு கல்வி கற்று தேர்ச்சி பெற்று விடாமுயற்சியால் போர் விமானி தேர்வுக்கு சென்றார். ஆனால், அங்கு அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மனம் தளராது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானி ஆனார். இருதய நோயாளிகளுக்கு கருவி என வேறு துறைகளிலும் அவரது கண்டுபிடிப்புகள் விரிந்தன. அவரது விடாமுயற்சி தான் அவரை இந்திய தேசத்தின் தலைமகனாக மாற்றியது. பிரச்சனைகளை சமாளித்து வெற்றி பெற்ற சாதனையாளர்களின் பட்டியல் எமக்கு பாடமாக அமையட்டும்.
அமெரிக்க தத்துவஞானி ஒருவர் “எம்பவர் மீ ஆன் லைன்” என்ற நூலில் வெற்றிக்கான படிக்கட்டுகளைக் குறிப்பிட்டுள்ளார்.
- முதலில் பெரிதாகக் கனவு காணுங்கள்.
- வழி நடத்தும் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
- நீங்கள் உங்களைச் சுயதொழில் முனைபவர் என நினைத்துக் கொள்ளுங்கள்.
- நீங்கள் செய்யும் வேலையைப் பெரிதும் நேசியுங்கள். உங்களுக்குப் பிடித்தமான வேலை எது என்பதைத் தீர்மானித்து, அதில் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
- எந்த வேலையையும் மிகவும் நேர்த்தியாக, சிறப்பாகச் செய்ய முயலுங்கள்.
- கடின உழைப்பே உங்கள் உயிர்மூச்சாக இருக்கட்டும். முன்னேறும் வரை சோர்வுக்குச் சற்றேனும் இடம் தராதீர்கள்.
- தொடர்ந்து முன்னேற்றத்தின் ஏணிப்படிக்கட்டுகளில் ஏறிச்செல்லுங்கள்.
- உங்களது ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒன்று முதல் இரண்டு சதவிகிதம் சேமியுங்கள் அதற்குமேல் மீதியுள்ள சம்பளத்தில் செலவழியுங்கள்.
- உங்களது தொழில் அல்லது வியாபாரத்தின் முழு நுணுக்கங்களையும் நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.
- மற்றவர்களுக்குச் சேவை செய்ய முயலுங்கள்.
- உங்களது தொழில் வளர்ச்சியில் தூய்மையும், நேர்மையும், தனித்தன்மையும் என்றும் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
- உங்களைப் போல மற்றவர்களையும் உயர்வாக எண்ணுங்கள். எல்லோரிடமும் அன்புடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ளுங்கள்.
- முக்கியமாக நிறைவேற்ற வேண்டியவற்றை முன்னுரிமையுடன் நிறைவேற்ற வேண்டியவை, அவசரமாக செய்து முடிக்க வேண்டியவை என்பதை நன்கு தீர்மானித்து, பட்டியலிட்டுக் கொண்டு செயல்படுங்கள். Plan Your Properties. Plan Accordingly and Complete Them Important, Priority, Urgent என்பதைத் தெளிவாக புரிந்துகொண்டு செயல்படுங்கள்.
- ஒரு உயரத்திலிருந்து அடுத்த உயரத்திற்குச் செல்ல உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
- உடன் பிறந்த கற்பனைத் திறனை ஒருபோதும் பூட்டி வைக்காதீர்கள்.
- எப்போதும் உங்களைச் சுற்றிலும் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பவர்கள் சூழ வாழுங்கள்.
- உங்கள் உடல் நலனில், ஆரோக்கியத்தைப் பேணுவதில் அக்கறை செலுத்துங்கள்.
- பயத்தை எப்படி வெற்றி கொள்வது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். வீணான அச்சத்திற்கு ஒருபோதும் இடம் தராதீர்கள்.
இந்த 18 முறைகளை நீங்கள் சரியாகப் பின்பற்றினால் உங்கள் வெற்றி நிச்சயம்.