இன்றைய காலகட்டத்திலும் முதலாளி வர்க்கத்தால் அடக்கி ஆளப்படுகிறோமா? ரஷ்ய புரட்சி முதல் இன்று வரை ஒரு கண்ணோட்டம்.
“மனிதனாய் பிறந்தவன் பிறர்க்கு பயனில்லாமல் அழியக்கூடாது” -கார்ல் மார்க்ஸ்-
உலக வரலாறில் ஒவ்வொரு சகாப்தமும் ஆளும் வர்க்கத்திற்கும் ஆளப்படும் வர்க்கத்திற்கும் சுரண்டும் வர்க்கத்திற்கும் சுரண்டப்படும் வர்க்கத்திற்கும் இடையிலான வர்க்க போராட்டமாகவே தனது வரலாறை பதிந்துள்ளது. இன்றும் அவ்வாறே பதிந்து கொண்டிருக்கின்றது. இப்போராட்ட வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது ரசியதேசம். ஜார்மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த தேசம் சினத்தெழந்தது. விளைவு, வெடித்தது ரஷ்யபுரட்சி. புரட்சியின் இறுதி வெற்றி வடிவம் தான் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நூற்றாண்டு வரலாறாகி நிற்கும் 1917 அக்டோபர் 25 இல் லெனின் தலைமையிலான பொல்செவிக்குகளின் அக்டோபர் புரட்சி…..
உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளுக்காகவும் பாட்டாளிவர்க்கத்தின் சுதந்திரத்திற்காகவும் முதலாளித்துவ சுரண்டல் ஆதிக்கவர்க்கத்திற்கு எதிராகவும் பொதுவுடைமை ஔியை இவ்வுலகிற்கு ஊட்டிய மாமேதை கார்ல்மார்க்ஸ். அந்த ஔிவிளக்கு தான் “கம்யூனிசம்“. பாட்டாளி வர்க்கத்தின் உரிமைகளை மீட்பதற்க்காக “உலக தொழிலாளர்களே! ஒன்றுசேருங்கள்” என்ற அறைகூவலோடு மார்க்சும் எங்கெல்சும் இணைந்து எழதிய “கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை.” (Communist manifesto) உலகமெங்கும் பரவியிருந்த வர்க்க பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டங்களையும் எதிர்குரல்களையும் வலுப்படுத்தியது; வழிப்படுத்தியது.
ஜார் என்றால் ரஷ்யா, ரஷ்யா என்றால் ஜார் என்ற நிலையில் ஆட்கள் மாறினாலும் ஆட்சி மாறாத தேசத்தில், மக்கள் மந்தை கூட்டம் போல அடிமைகளாக நடத்தப்பட்டனர். கீழ்ப்படிவது மட்டுமே அவர்களுக்கு இருந்த ஒரே உரிமை. இறுதி ஜார் மன்னன் இரண்டாம் நிக்கோலஸ் மக்கள் மீது அக்கறையற்று ஆடம்பர சுகபோகங்களில் மூழ்கி ரஷ்புத்தின் என்ற மதகுருவிற்கு கட்டுப்பட்டவனாக மக்கள் வறுமையில் வாடுவதை பொருட்படுத்தாது கொடுங்கோல் ஆட்சி செய்தான். ரஷ்ய இராணுவத்தில் சேவைபுரிந்த வீரர்களுக்கே உழைப்பிற்குரிய ஊதியம் வழங்கப்படாத நிலையில் சமானிய மக்களின் நிலை பலமடங்கு மோசமாக இருந்த காலம் அது.
அடிமை விலங்கை உடைத்து சுதந்திர காற்றை சுவாசிக்க பலமுறை முயன்றும் அதிகார வர்க்கத்தின் இரும்புக்கரங்களால் ரஷ்யமக்கள் நசுக்கப்பட்டனர். இந்நிலையில் தான் மார்க்சியத்தை முழுமையாக உள்வாங்கிய “லெனின்” களத்தினுள் புகுந்தார். தெளிவானதொரு சித்தாந்தையும் அச்சிந்தாந்தை நடைமுறைபடுத்துவதற்குரிய முற்போக்கு செயற்றிட்டங்களையும் வகுத்துக்கொண்டு செயற்பட்டார். அவர் தலைமையில் திரண்ட தொழிலாளர் வர்க்கமும் பொல்செவிக்குகளும் மேற்கொண்ட தொடர்ச்சியான போராட்டங்களின் வெற்றி தான் இன்றைய நூற்றாண்டு கொண்டாட்டத்தின் அக்டோபர் ரஷ்யபுரட்சி. மார்க்சின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்து லெனின் கம்யூனிசத்தின் முதல் வெற்றியை அக்டோபர் புரட்சியாக வரலாற்றில் பதிந்தார். விளைவு, உலகெங்கிலும் பரவியிருந்த அடிமை விலங்கை உடைக்க வெற்றிக்கொடியாக மாறியது கம்யூனிசத்தின் சிவப்புக்கொடி.
அக்டோபர் புரட்சியின் வெற்றி முதலாளித்துவ வர்க்கத்தின் அடித்தளத்தை தகர்த்து பாட்டாளி வர்க்கத்தின் பலத்தை உலகிற்கு பறைசாற்றியது. இதனால் விழித்துக்கொண்ட முதலாளித்துவ வர்க்கம் தன்னுடைய சுரண்டல் நிலையின் பரிமாணங்களை வேறு தளத்திற்கு எடுத்து சென்றது. அதன் இன்றைய பெயர் தான் “பல்தேசிய கம்பெனிகள்”. இன்றைய முதலாளித்துவத்தின் ஆக்டோபஸ் கரங்கள் ஒவ்வொரு தனி மனிதனையும் உடலியல், உளவியல், உணர்வியல் ரீதியாக பற்றி அவனை அடிமையாக்கி தான் வைத்துள்ளது. இதில் மிகப்பெரிய வேடிக்கை, அதே நேரம் சோகமான உண்மை என்னவென்றால் உலகிலுள்ள அநேக மனிதர்கள் இந்த அடிமைத்தனத்தை உணராதிருப்பது தான். உண்மையை சொன்னால் ரசியதேசத்தில் இருந்த நேரடியான அடிமைப்படுத்தலை விட இன்றைய உலகிலுள்ள மறைமுகமான அடிமைப்படுத்தல் மிக மிக ஆபத்தானது. ஒவ்வொரு மனிதனையும் சுதந்திரமானவன் என்ற எண்ணவோட்டத்துடனேயே அவனும் அறியாமலே மிகப்பெரியதொரு அடிமைவலையால் பீடிக்கப்பட்டுள்ளான்.
இன்றைய அறிவியல் ரீதியான சமூகத்தில் தந்திரோபாயம் மிக்க சுரண்டல் முறைகளையே முதலாளித்துவமும் கைக்கொள்கிறது. இயற்கை முறையாக இருந்த விவசாயத்தில் கிருமிநாசினிகள், களைகொல்லிகள் போன்ற இரசாயணங்களின் பாவனை மண்வளத்தை அழித்தது. தொழிற்சாலைகளின் முறையற்ற கழிவு வெளியேற்றம் நீர், காற்று என்பவற்றை மாசடைய செய்தது. விளைவு புதிய புதிய நோய்கள் உருவாகின. உண்ணும் உணவு நஞ்சாகியது. விரைவுணவு கலாசாரம் பெருகியது. பல்தேசிய கம்பெனிகளின் மருந்து மாபியாக்கள், சர்வதேச உணவு நிறுவனங்கள் போன்றன மக்களை அடிமைப்படுத்தின. கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகள் யாவும் வியாபாரமாக்கப்பட்டு முதலாளிவர்க்கத்தில் சார்ந்திருக்கும் கட்டாயநிலை உருவாகியிருக்கிறது.
இன்றைய தகவல் தொடர்பாடல் விஞ்ஞானத்தின் வளர்ச்சி மக்களை உளவியல் ரீதியாக அடிமைப்படுத்துவதற்கு பெரிதும் உதவியது. தொலைக்காட்சி, தொலைபேசி, சமூக வலைத்தளங்கள் போன்ற நவீன ஊடகங்கள் மனிதனின் சுயசிந்தனை நேரத்தை அழித்து அவர்களை சறுசுறுப்பற்றவர்களாக மாற்றி இயந்திர வாழ்க்கைக்கு நாகரீகம் என்ற போர்வை போர்த்தி தள்ளுகிறது. முக்கியமாக ஊடகங்கள் மக்களின் பலவீனங்களை காசாக்குவதற்கு விளம்பரம் மூலம் உதவுகிறது. எதுவித பயனுமே இல்லாத பொருளைக்கூட திரும்ப திரும்ப விளம்பரப்படுத்தி மக்களை மூளைச்சலவை செய்து அதனுள் வியாபாரம் செய்வதில் இன்றைய முதலாளித்துவம் மிகவும் இராஐதந்திரமான சூழ்ச்சிகளில் முன்நிற்கிறது.
இன்றைய முதலாளித்துவம் மக்கள்கூட்டத்தை “அடிமை” என்ற உணர்வில்லாத சுதந்திரஅடிமைகளாக அன்றாட வாழ்வியலின் ஒவ்வொரு பகுதியிலும் இறுகப்பற்றித்தான் உள்ளது. எந்தவிதமான புரட்சி எண்ணங்களும் தோன்றாதவாறு விஞ்ஞானம், நாகரீகம் எனும் பதங்களை காட்டி ஒரு இனத்திற்கு தனித்துவமாகவுள்ள கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை மெல்ல மெல்ல அழித்து வருகின்றது. தன்னுடைய சுய அடையாளங்களை இழந்த ஓர் இனம் அல்லது தனிமனிதன் புரட்சி என்ற எழச்சியை ஒருபோதும் செய்யமுடியாது என்பது இன்றைய முதலாளித்துவ அரசியலின் முற்போக்குப்பார்வை தான். ஆனால் உலக வரலாற்றில் எந்தவொரு இனமும், மக்கள்கூட்டமும் தொடர்ந்து அடிமைகளாகவே இருந்ததில்லை. இன்றைய மக்கள் சமூகமும் அறியாமை இருளிலிருந்து மீளும் போது சுயநலமற்ற பொதுவுடமை சிந்தனையும், மார்க்சின் கருத்துக்களும், லெனினின் செயல்முறைகளும் மீண்டும் முதலாளித்துவ வர்க்கத்தை நிச்சயமாக வீழ்த்தும். ஆனால் சுரண்டல் முதலாளித்துவ வர்க்கத்தை முற்றாக அழிக்க மக்கள் பேராசை, சுயநலமற்ற பொதுவுடமை சிந்தனையுடையவர்களாக மாறுதல் அவசியம் .
இறுதியாக, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் ஆங்கில பதிப்பிற்கான முகவுரையில் எங்கெல்ஸ், மார்க்ஸின் சிந்தனையை இவ்வாறு குறிப்பிடுகிறார். “வரலாற்றின் வழிவந்த ஒவ்வொரு சகாப்தத்திலும் அப்போது ஓங்கிய நடப்பிலுள்ள பொருளாதார உற்பத்தி, பரிவர்த்தனை முறையும் இதிலிருந்து இன்றியமையாதவாறு பெறப்படும் சமூக அமைப்பு முறையும் தான் அந்த சகாப்தத்தின் அரசியல் அறிவுத்துறை வரலாற்றின் அடிநிலையாகின்றது. அந்த அடிநிலையிலிருந்து மட்டுமே அந்த அரசியல் அறிவுத்துறை வரலாற்றினை விளக்க முடியும். ஆகவே மனித குல வரலாறு அனைத்தும் வர்க்கபோராட்டங்களதும் சுரண்டும் வர்க்கத்திற்க்கும் சுரண்டப்படும் வர்க்கத்திற்க்கும் இடையிலான போராட்டங்களாகவே பதிந்துள்ளது. எனவே முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதீக்கத்திலிருந்து விடுதலை பெற பாட்டாளி வர்க்கம் போராட வேண்டியது அவசியமாகின்றது” . இது இன்றும் அவ்வாறே………..