உணர்ச்சி என்பது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளின் போது அந்தந்த கணத்து அனுபவங்களின் பிரகாரம் பல்வேறு விதத்திலும், பருமனில் வெளிக்காட்டப்படும் பதிற்செயற்பாடுகள் ஆகும். ஒரு மனிதனின் வாழ்க்கை வட்டத்தின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் உணர்ச்சிகள் முக்கிய பங்காற்றுகின்றன. உணர்வுகள் புறக்கணிக்கப்படின் ஒரு மனிதனின் பிரச்சனை எதுவென ஒருபோதும் தெளிவாக தெரியாது.உள்ளத்தின் பேராற்றலாக பிரதிபலிக்கும் உணர்வு அறியப்பட்டு, ஒழுங்கு படுத்தப்பட்டு உரிய வகையில் பிரயோகிக்கப்படுமாயின் அதன் விளைவு நிச்சயம் ஒரு மனிதனின் வாழ்வினில் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்றப்படுத்தியே தீரும். வாழ்வில் வெற்றி பெற, மகிழ்ச்சியாய் இருக்க உணர்வின் முக்கியத்துவத்தை அறிவது அவசியம்..
வாழ்வின் வெற்றியோ, தோல்வியோ உணர்வின் வழிதான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. பெரும் சாதனை புரிந்தவர்கள், பெரும் தலைவர்கள் என்போரது வாழ்வை ஆராய்ந்து பார்த்தோமானால் அவர்களின் பாரிய வெற்றிக்கு பின் வெறும் அறிவு மட்டுமல்லாது அவர்களின் உணர்வுகளை கையாளும் திறனும் முக்கிய பங்கு வகிக்கின்றன எனலாம்.
உணர்வுகளின் வகைகள்…
உணர்வுகள் இரண்டு வகைப்படுகின்றன. அவையாவன நேர்நிலை உணர்வுகள், எதிர்நிலை உணர்வுகள் என்பனவாகும். எல்லா உணர்வுகளும் மூளையின் ஒரு பகுதியில் இருந்து தான் உருவாகின்றன. ஒவொரு உணர்ச்சியும் நமது உடலிற்கும் உள்ளத்திற்கும் ஆக்கபூர்வமான ஒரு செய்தியை தான் சுமந்து வருகின்றன. வலி தரும் உணர்வுகள் என்பன பெரும்பாலும் நம்வாழ்க்கை முறையில் நிகழ்த்தப்பட வேண்டிய கூடுதல் கவனத்தை வலியுறுத்தவே எழுகின்றன.
சோகம்,துக்கம் போன்றவை ஓர் இழப்பை உணர செய்து அந்த அனுபவம் மூலம் வாழ்வின் உற்சாகத்தை,ஆக்க சக்தியை மீண்டும் எம்மில் தோன்ற செய்கின்றது. நமே ஏட்படுத்திக்கொள்ளும் உணர்வல்லாது தாமாகவே ஏற்படும் பய உணர்வு என்பது நாம் சந்திக்க இருக்கும் ஆபத்திலிருந்து நம்மை காப்பாற்றி கொள்ளத் தூண்டுகின்றது.
நம்முள் தோன்றும் உணர்ச்சிகளை இயல்பாக வெளிப்படுத்தும் போது நம் அத்தனை இயக்கங்களும் இயல்பாகவே செயற்படுகின்றன. அந்த உணர்வுகளை எப்படி அடக்குவது? எப்படி திசை திருப்புவது? என்ற சிந்தனையே ஒரு வித அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. இதன் விளைவாக மொழிக்கு செல்லும் பிராண வாயுவின் அளவு குறைந்து மூளையின் இயல்பான செயல்பாடை பாதிக்கின்றது. உணர்வுகள் தாழ்வானது எனக் கருதும் எண்ணமே எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக முடிவெடுக்கும் தன்மை பாதிப்படைகின்றன.
உணர்வுகளை அடக்குவதால்…
உணர்வுகளை அடக்குவதை பெரும் சாதனையாக கருதுகின்ற சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உதாரணமாக விளையாட்டு பலூனுக்கு அடம்பிடிக்கும் குழந்தையிடம் “அழாத அழுதா உன்ன மீசைக்காரனிடட பிடிச்சு குடுப்பன்” எனும் மிரட்டலினால் குழந்தையின் அழுகை நிறுத்தப்படுகிறது.
விளைவு விழித்தசைகளை, முகத்தசைகளை சுருக்கி, உதடு கடித்து, மூச்சை இழுத்துப்பிடித்து தான் அழுகையை, கோபத்தை மற்றும் ஏமாற்றத்தை அடக்கும் செயற்பாடுகள் அரங்கேற தொடங்கும். துக்கத்தில் இருக்கும் போது சிரிக்க முயற்சிக்கும் போது உடலின் தசை நார்கள் விபரீதமாக சுருங்குகின்றன. உணர்ச்சிகளும் அவை ஏற்படுத்தும் வலிகளும் அவற்றின் மீது அச்ச உணர்வை ஏற்படுத்துகின்றன. இதனால் அவற்றை விட்டு ஓட நினைக்கின்றோம். அதற்கு மனதை திசை திருப்பும் முயற்சியாக சில செயல்களில் ஈடுபடுகின்றோம். அதுவே நாளடைவில் பழக்கமாகி அந்த பழக்கத்திற்கு அடிமையாகின்றோம்.
பெரும்பாலும் புகைத்தல், குடி, போதை பழக்கம், அளவுக்கு அதிகமாக உணவு உட்க்கொள்ளல், அதிகமாக வேலை செய்தல், தனிமைபடுத்தி கொள்ளல், ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுதல் ஆகியவை பெரும்பாலும் கோபம், துக்கம் போன்ற உணர்ச்சிகளின் திசை திருப்ப பழக்கங்களாகவே தொடங்குகின்றன. எந்தவொரு பிரச்சனைக்கும் நம் உணர்ச்சிகள் அதற்கான தீர்வை உடனடியாக வழங்க தயாராக உள்ளது. ஆனால் நாம் எம்மையும் எம் உணர்வையும் ஏற்பதில்லை.
உணர்வுகளை ஏற்றுக் கொள்ளுவதால்….
உணர்வுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் தங்களையே ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாகின்றனர். இதனால் நாளடைவில் தம் மீதே வெறுப்பு கொள்ளவும் செய்கின்றனர். இவ் ஏற்று கொள்ளாத தன்மை வாழ்வின் சரியான முடிவுகளை எடுக்க தடை கல்லாக அமைகின்றது. நம் எல்லோராலும் உணர்வுகளை ஏற்றுக்கொள்ள முடியும். அவை எத்தகைய வலியுடையவையாக இருப்பினும் எவ்வாறாக இருப்பினும் அவற்றை நாம் ஏற்கும் போது நம் வெறுப்புகளை மறந்து நம்மை நேசிக்க தொடங்குகின்றோம். அதனால் பிறரையும் நேசிப்போம்.
வாழ்வில் ஏற்படும் தோல்விகள், பின்னடைவுகள், ஏமாற்றங்கள் இவற்றின் போது உணர்வுகளை கையாள தெரிந்தவர் அந்த சூழ்நிலை ஏற்றப்படுத்தும் பாதிப்புகளில் இருந்து மீண்டும் தான் இயல்பான வாழ்க்கையை வாழவும் மேலும் உற்சாகப்படுத்தி கொள்பவராகவும் இருப்பார் என்பது பல ஆய்வுகளின் முடிவாகும். தன் உணர்வுகள் பற்றிய விழிப்புணர்வு உள்ளவர்களுக்கு அடுத்தவர்களின் தேவைகளை புரிந்து அவர்களோடு சுமூகமான உறவை ஏட்படுத்தவும் முடிகின்றது. தன் உணர்வு திறனை வெற்றிகரமாக செயல்படுத்த தெரிந்தவன் அனைவரையும் கவரும் மனிதனாகவும் சிறந்த தலைவனாகவும் வாழ முடியும் என்பதில் ஐயமில்லை..
எனது இக்கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..