அலைபேசி பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்!!!

“இனி எதிர்காலத்தில், ஒவ்வொருவரின் சட்டைப் பையிலும் ஒரு தந்திக் கருவி இருக்கும்.” 1930 களில், இத்தகைய புரட்சிக் கருத்தை வெளிப்படுத்தியவர் யார் தெரியுமா? இது நமது தமிழ் மண்ணின்  தந்தை பெரியார் எனும் தத்துவமேதை, தொலைநோக்குப் பார்வையோடு, இயல்பாக வெளிப்படுத்திய கருத்து இது. ஏறத்தாழ, எண்பது ஆண்டுகளுக்கு முன்பு, யாரும் சிந்திக்க முடியாத கோணத்தில் சிந்தித்து, அவர் குறிப்பிட்ட அந்தத் தந்திக் கருவிதான், இன்று உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டு இருக்கின்ற அலைபேசி.

இன்று,  மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அலைபேசிகள்,  புழக்கத்தில் இருக்கின்றனவாம். இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், முதல் பத்து ஆண்டுகளில், அலைபேசிகள் ஏற்படுத்தி இருக்கின்ற மாற்றங்கள், இனி இந்த நூற்றாண்டு எத்தகைய புரட்சிகளைக் காண இருக்கின்றது என்பதை ஊகிக்க வைக்கின்றது.

செல்போன்”, “மொபைல்” என்ற ஆங்கிலச் சொற்களுக்கு, “செல்பேசி”,  “செல்லிடபேசி”, “அலைபேசி” என, தமிழில் பல சொற்களைச் சொல்லுகிறார்கள். வான் அலைகளின் வழியாகப் பேசுவதால், “அலைபேசி’” என்பதுதான் ஓரளவு பொருத்தமாகத் தெரிகின்றது.

eco-cellphones

அலைபேசிகளை முறையாகப் பயன்படுத்தினால், அது நம்மை முன்னேற்றும்;  வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்; தவறாகப் பயன்படுத்தினால், சிறைக்கூடத்துக்கு உள்ளே கொண்டு போய்ப் பூட்டி விடும். அன்றாடம் நாளிதழ்களில் நாம் படிக்கின்ற செய்திகள் அதை உணர்த்துகின்றன.

அலைபேசிகளால் கிடைக்கின்ற நன்மைகள் அதிகம். தீமை என்று சொன்னால், உயிரை இழக்க நேரிடும். அவ்வளவுதான்.

நம் கண்முன்னேயே சிட்டுக்குருவிகள் காணாமல் மறைந்து போனதற்கு, அலைபேசி கோபுரங்களின் மின்காந்த அலைவீச்சுதான் காரணம் என்று ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. நமது உடல்நலத்துக்கும், மனநலத்துக்கும் அலைபேசிகள் ஏற்படுத்துகின்ற கேடுகள் கொஞ்சநஞ்சம் அல்ல.

எனவே, அலைபேசிகளை முறையாகப் பயன்படுத்துவதற்கு உதவியாக, சில கருத்துகளை, உங்கள் கவனத்துக்கு முன்வைக்கின்றேன்.

mobile-using

1. அலைபேசிகளை எப்போதும் கைகளிலேயே வைத்துக் கொண்டு இருக்காதீர்கள். அவை, வானொலி மற்றும் மின்காந்த அலைகளை, உங்களை நோக்கி ஈர்க்கின்றன. அதனால், கை விரல் கைநரம்புகள் கடுமையாகப் பாதிக்கப்படும். சில ஆண்டுகளில் கை நடுக்கம் ஏற்பட்டு விடும். எதையும் உறுதியாகப் பற்றிப் பிடிக்க முடியாமற் போய்விடும். அலைபேசியை  இயக்கும்போதும், அணைத்து வைக்கும்போதும், அதற்கான பொத்தானை அழுத்தியபின்பு, உடனே கீழே வைத்து விடுங்கள். அந்த வேளையில்தான், கதிர் வீச்சு கூடுதலாக இருக்கும். இணைப்பு கிடைத்தபிறகு, கையில் எடுத்துப் பேசுங்கள்.

அலுவலகத்திலும், வீட்டிலும் இருக்கும்போது, கூடியவரையிலும், கைக்கு எட்டுகின்ற தொலைவில், இரண்டு அடிகள் தள்ளியே  வைத்து இருங்கள். பேசும்போது மட்டும் உங்கள் கைகளில் இருந்தால் போதும்.

2. ஒரு எண்ணைச் சுழற்றிவிட்டு, எதிர்முனைக்கு சத்தம் போகிறதா? என்று கேட்டுக் கொண்டே இருப்பது தவறு. ஏனெனில், அடுத்த தொலைபேசிக்கு அழைப்பு செல்லும்போதுதான், கதிர்வீச்சு, மற்றும் மின்காந்த அதிர்வுகள் கூடுதலாக இருக்கும். அது உங்கள் காதுகளையும், மூளையையும் கடுமையாகப் பாதிக்கும். எனவே, எண்களைச் சுழற்றியபின், அலைபேசியை உங்கள் கண்ணுக்கு முன்னே கொண்டு வந்து, இணைப்பு கிடைக்கிறதா என்பதைத் திரையில் பார்த்துவிட்டு, அதன்பிறகு உரையாடலைத் தொடங்குங்கள்.

mobile-talking

3. இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்குத் தெரிந்து இருக்கும். இந்தச் செய்தியைப் படித்து இருப்பார்கள்; படத்தைப் பார்த்து இருப்பார்கள். ஒரு சோதனை: இரண்டு அலைபேசிகளை மின்னூட்டம் செய்யும்போதும், பேசும்போதும், அவற்றுக்கு இடையில் ஒரு முட்டையை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரத்தில், அந்த முட்டை வெந்து விடும்; நீங்கள் எடுத்துச் சாப்பிடலாம். அந்த அளவுக்கு அதில் அதிர்வும், வெப்பமும் உண்டாகிறது.

4. எனவே, சுருக்கமாக உரையாடுங்கள். ‘என்ன? ஏது?’ என்று கேட்டு, இரண்டு நிமிடங்களுக்குள் உரையாடலை முடித்துக் கொள்ளுங்கள்.  ஆகக்கூடுதலாக, ஒரு அழைப்பில், ஐந்து நிமிடங்களுக்கு மேல் பேசாதீர்கள். அதிலும் கூடுதலாக, கட்டாயத் தேவை என்றால், தொடர்ச்சியாக 17 நிமிடங்களுக்கு மேல் பேசாதீர்கள்.  மேலும் தேவை என்றால், 15 நிமிடங்கள் இடைவெளி விட்டுப் பேசுங்கள். பேசும்போது, அலைபேசி உங்கள் காதுகளிலேயே ஒட்டிக் கொண்டு இருக்க வேண்டியது இல்லை. அதில் உள்ள ஒலிபெருக்கியை இயக்கி, சற்றுத் தள்ளி வைத்துக் கொண்டே கேளுங்கள்; பதில் சொல்லுங்கள்.

5. வீண் பேச்சு, வினையாகி விடும். உங்கள் நேரத்தைச் சேமியுங்கள்.

6.எண்களைச் சொல்லும்போது, “நீங்கள் சொல்வது கேட்கவில்லை; சத்தமாக இருக்கிறது, ஒரே இரைச்சலாக இருக்கின்றது; திரும்பச் சொல்லுங்கள்” என்றெல்லாம் மாறிமாறிக் கேட்பார்கள். எரிச்சலாக இருக்கும். எனவே,  எண்களைச் சொல்லிக் கொண்டே இருப்பதைவிட, தொலைபேசி எண்கள் மற்றும் மின் அஞ்சல் முகவரிகளை, குறுஞ்செய்திகளாகவே எழுதி, சரிபார்த்து அனுப்பி விடுங்கள். பிரச்சினை வராது.  நான் யாருக்கும் தொலைபேசி எண்களைச் சொல்லுவது இல்லை. எல்லாமே குறுஞ்செய்திதான்.

mobile-using-in-bike

7. அலைபேசியில் ஏதேனும் பிரச்சினை என்றால், அதுவரை நீங்கள் சேமித்து வைத்து இருந்த நூற்றுக்கணக்கான எண்களையும் இழக்க நேரிடும். எனவே, உங்களுடைய தொடர்பு எண்களை, ஒரு குறிப்பு ஏட்டில் தனியாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். சிறிய குறிப்பு ஏடுகளில் அல்ல; அதுவும் தொலைந்து விடக்கூடும்; எனவே பெரிய டைரியில் பதிவு செய்து, அதை வீட்டில் ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். அதில் தொடர்ந்து புதிய எண்களையும் பதிவு செய்து கொண்டே வாருங்கள். வெளியே எடுத்துக் கொண்டு போக வேண்டுமானால், அதற்கெனத் தனியாக இன்னொரு கையேட்டை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

8. ‘வண்டி ஓட்டும்போது, அலைபேசி அழைப்புக்குப் பதில் சொல்ல முனையாதீர்கள். அழைப்பது எமனாகவும் இருக்கலாம்.அலைபேசியில் பேசிக்கொண்டே, பாட்டு கேட்டுக் கொண்டே தண்டவாளத்தைக் கடந்தவர்கள், சாலையைக் கடந்தவர்கள் என  மின்தொடர்வண்டியிலும், பேருந்துகளிலும் அடிபட்டு, உடல் சிதறி உருத்தெரியாமல் போனவர்கள் பலர். அதுமட்டும் அல்ல, நிறைய இளைஞர்கள், வண்டி ஓட்டிக் கொண்டே பேசிச் சென்றதால், விபத்தில் சிக்கி எலும்பு முறிவு சிகிச்சை பெற்றுக் கொண்டு இருக்கின்றார்கள். காரணம், பின்னால் வந்த வண்டிகள் எழுப்புகின்ற ஒலியைக் கேட்க முடியாமல் போய்விட்டது. மருத்துவமனைக்குச் சென்று பாருங்கள். இலட்சக்கணக்கில் செலவு; உடல் நலத்துக்கும் பெருங்கேடு.

danger-driving

அலைபேசிகளில் நீண்ட நேரம் பாடல்களையும், வானொலி நிகழ்ச்சிகளையும் கேட்பவர்கள், தாமாக சிந்திக்கும் திறனை இழந்து விடுகின்றார்கள்.

உங்கள் ஊரில் அலைபேசிகளால் பல விபத்துகள் ஏற்பட்டு  இருப்பதையும், உங்களுக்கு வேண்டிய நண்பர்கள், உறவினர்கள் இறந்து போயிருப்பதையும் நீங்கள் அறிவீர்கள். அந்த வலியையும் உணர்வீர்கள்.

அலைபேசிகளால் இறந்தவர்கள் எத்தனை பேர்? எப்படி? என்று யாரேனும் ஒருவர், பல்கலைக்கழக பட்டத்துக்காக ஆய்வுகளை மேற்கொண்டு, அதை நூலாகத் தொகுத்து வெளியிட்டால், அது இந்த சமுதாயத்துக்குச் செய்யும் பேருதவி ஆகும்.

9. வண்டி ஓட்டும்போது, நமக்கு வருகின்ற அழைப்பைத் தவிர்ப்பது மட்டும் போதாது. நீங்கள் ஒருவரை அழைக்கும்போது, அவர் உங்களோடு பேசத் தொடங்கும்போது, காற்று மோதுவதால் ஏற்படுகின்ற இரைச்சல் சத்தம் கேட்டால், ‘வண்டி ஓட்டிக் கொண்டு இருக்கின்றீர்களா?’ என்று கேளுங்கள். ‘பரவாயில்லை, சொல்லுங்கள்’ என்று அவர் சொன்னால், ‘நான் பிறகு பேசுகிறேன்’ என்று சொல்லிவிட்டு, உடனே தொடர்பைத் துண்டித்து விடுங்கள். நீங்கள் அவருக்கு எமனாக மாறி விடாதீர்கள்.

நீங்கள் வண்டி ஓட்டத் தொடங்குவதற்கு முன்பு, அலைபேசியை பெட்டிக்குள் போட்டுப் பூட்டி விடுங்கள். இல்லையேல், கண்டிப்பாக எடுத்துப் பேசத் தூண்டும். கவனம் சிதறாமல், சாலையைக் கவனித்து ஓட்டுங்கள். உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கும்.

mobile-using-noises

போக்குவரத்துக் காவலர்கள், வண்டிகளை நிறுத்தி, ‘குடித்து இருக்கின்றார்களா? ஓட்டுநர் உரிமம் வைத்து இருக்கின்றார்களா? என்று மட்டும்தான் சரி பார்க்கின்றார்களே தவிர, இரண்டு காதுகளிலும் ஒலிபெருக்கிகளைப் பொருத்திக் கொண்டு, அலைபேகளில் இருந்து பாடல்களைக் கேட்டுக் கொண்டே செல்பவர்களைக் கண்டு கொள்வதே இல்லை; எச்சரிப்பதும் இல்லை; தண்டம் விதித்ததும் இல்லை. அது ஏன் என்றும் புரியவில்லை. விழுந்து சாகட்டும் என்று நினைக்கின்றார்களா?

10. அலைபேசிகளை மின்னூட்டம் செய்யும்போது பேசக் கூடாது. எச்சரிக்கை. உங்கள் காதுச் சவ்வு, மிகமிக மென்மையானது. கிழிந்து விட்டால், கடைசி வரை கேட்க முடியாது. பாதுகாத்துக் கொள்வது உங்கள் பொறுப்பு.

11. கால்சட்டையின் முன்புறம் உள்ள பையில் அலைபேசிகளை வைப்பதால், ஆண்களுக்கு விந்தணுப் பைகளைப் பாதிக்கும்.

12. உங்கள் உடல் வளர்ந்த, முதிர்ந்த உடம்பு. ஓரளவுக்குத் தாக்குப் பிடிக்கும். ஆனால், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் உடல் பட்டுப் போன்றது. அதைப் பாதுகாக்க வேண்டும். அலைபேசிகளின் மின்காந்த, வானொலி, மற்றும் நுண்ணலை கதிர்வீச்சுகள் குழந்தைகளைக் கடுமையாகப் பாதிக்கும். அதிலும் குறிப்பாக, மூளையையும், காது சவ்வுகளையும் கடுமையாகப் பாதிக்கும். மூளை வளர்ச்சியைத் தடுத்து விடும். நினைவு ஆற்றல் குறைந்து விடும். எனவே, குழந்தைகள் கையில் அலைபேசிகளைக் கொடுக்காதீர்கள். அதில் பல மணி நேரம் விளையாட விடுவது பெருங்கேடு. அதேபோல கர்ப்பிணிப் பெண்களும் செல்போன் பயன்படுத்துவதைக் குறைக்க வேண்டும்.

mobile-using-children

13. உறங்கச் செல்வதற்கு முன்பு நீண்ட நேரம் பேசினால், நீங்கள் முழுமையாக உறங்க முடியாது. அந்தப் பேச்சு தொடர்பாகவே உங்கள் மூளை சிந்தித்துக் கொண்டே இருக்கும். எனவே, இரவு ஒன்பது மணிக்கு மேல் பேசாதீர்கள். கண்டிப்பாக மூளைக்கு 6 மணி நேரம் முழுமையான ஓய்வு தேவை. எப்போது போன் வரும் என்று எதிர்பார்த்து, தலைக்கு அருகிலேயே வைத்துக் கொண்டு இருப்பது மிகமிகத் தவறு.

14. இருதய அறுவை மருத்துவம் செய்து, இதயத்துடிப்புக் கருவி பொருத்தி இருப்பவர்கள் அலைபேசியில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதயத் துடிப்புக் கருவியின் இயக்கத்துக்கு, அலைபேசி இடையூறு செய்யும்.

15. அலைபேசி கோபுரங்கள் உள்ள இடங்களில், 400 மீட்டர் சுற்றளவுக்குள் இருக்கின்ற உள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு, கேன்சர் நோய் வருவதற்கான வாய்ப்புகள் மூன்று மடங்கு அதிகம். அவர்களுக்கு மன அழுத்தம், உணவு செரிமானக் கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. ஐரோப்பிய நாடுகளில் அலைபேசிகளால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றங்களில் விரிவாக விவாதிக்கப்பட்டு உள்ளன. அதுகுறித்த விரிவான அறிக்கைகள், இணையதளத்தில் காணக் கிடைக்கின்றன. படித்துப் பாருங்கள்.

16. உங்கள் கைகளில் உள்ள அலைபேசியை, ஆபத்தான இடங்களில் இயக்கும்போது, அது ஒரு தானியங்கியாகச் செயல்பட்டு, குண்டுகளை வெடிக்க வைத்து விடும்.

17. பெருமழை பெய்யும்போதும், பலத்த இடிச் சத்தம் கேட்கும்போதும், மின்னல் வெட்டும்போதும் பேசக்கூடாது. அந்த வேளைகளில், அலைபேசி ஒரு இடிதாங்கி போலச் செயல்பட்டு, இடி, மின்னலை உங்களை நோக்கி ஈர்த்துவிடும்.

தவறான அழைப்புகள்

தவறான அழைப்புகளைத் தவிர்த்து விடுங்கள். அது நமக்கான அழைப்பு இல்லை என்று தெரிந்தால், மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல், உடனே துண்டித்து விடுங்கள். முகம் அறியாத, எதிர்பாலினருடன் தேவை இல்லாமல் பேசுவதும் தீமையே.

wrong-call

நன்மைகள்

கொலைகாரர்கள், குற்றவாளிகள், கள்ளத் தொடர்புகள் வைத்துக் கொண்டு இருப்பவர்கள், அலைபேசிகளால் எளிதாக மாட்டிக் கொள்கின்றார்கள். இன்றைக்கு எந்த ஒரு குற்ற இயல் வழக்கு என்றாலும், ஒருவருடைய அலைபேசி உரையாடல்களை, ஓராண்டு ஆய்வு செய்தாலே போதும்; ஆவணங்கள் எளிதாகக் கிடைத்துவிடும். அப்படித்தான் காவல்துறை செயல்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டு நாளிதழ் செய்திகளைப் படித்துப் பாருங்கள்  கைதான குற்றவாளிகள் அனைவருமே, அலைபேசியால்தான் மாட்டிக் கொண்டார்கள் என்பது புரியும். ஒருவர், தான் திருடிய அலைபேசியை, ஓராண்டு கழித்துப் பயன்படுத்தும்போது மாட்டிக் கொண்டார்.

“40 ஆண்டுகளுக்கு பிறகு கல்லூரி நண்பர்கள் ஒன்றுகூடல்” என்ற மகிழ்ச்சியான செய்தியைப் பார்க்கின்றோம். அவர்களை ஒன்றாக இணைத்தது அலைiபேசிககள்தாம். எனவே, தொலைந்து போன நட்பையும் மீட்டுக் கொள்ள அலைபேசிகள் உதவுகின்றன.

இப்படி, அலைபேசிகளின் நன்மை, தீமைகள் என எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம்.

சுருக்கமாகச் சொல்வது என்றால், அலைபேசிகளை முறையாகப் பயன்படுத்தினால் நன்மை; தவறாகப் பயன்படுத்தினால் தீமை.

Leave your comment
Comment
Name
Email